சென்னை,
இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சிகள் களம் காண்கின்றன.
சட்டசபை தேர்தல் முடிந்து 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதால் புதிதாக ஆட்சி அமைத்துள்ள த.வெ.க.வுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். த.வெ.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் பானுமதியும் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.