கடலூர்,
கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த முகமது ரபீக். இவரது மனைவி சாரா பீவி. இவர் தனது வீட்டில் வழக்கம் போல சமைத்துக்கொண்டிருந்தார். அப்போது சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிப்பில் அடுத்தடுத்து இரண்டு சிலிண்டர்கள் வெடித்தன. இதில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்து சுவர் இடிந்து விழுந்தது. மேலும், இந்த விபத்தில் ரபீக்கின் மனைவி சாரா பீவி பலத்த காயமடைந்தார்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் காயமடைந்த சாரா பீவியை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.