தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே அம்மன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தளபதி (36). இவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஆவார்.இந்த நிலையில், இவருக்கு பிறந்தநாள் என்பதால் நேற்று இரவு தளபதியும், அவரது நண்பர்களான அம்மன்பேட்டையை சேர்ந்த தமிழரசன் (27), நிதீஷ் (25), சுதர்சன் (21), நரேன் (18), அபினேஷ் (21) ஆகிய 6 பேரும் ஒரு காரில் திருவையாறுக்கு புறப்பட்டனர். காரை தமிழரசன் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது பின்னர் அங்கு அனைவரும் தளபதியின் பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது அனைவரும் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் இன்று அதிகாலை 3 மணி அளவில், திருவையாறில் இருந்து அனைவரும் காரில் அம்மன்பேட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கண்டியூர் அருகே சுற்றுகுளத்தான்கரை பகுதியில் கார் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் தளபதி மற்றும் தமிழரசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் காரில் இருந்த மற்றவர்கள் “காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...” என்று அபயக்குரல் எழுப்பினர்.
அப்போது அவ்வழியாக சென்றவர்கள் விரைந்து வந்து மீதமுள்ள 4 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது