தமிழக செய்திகள்

தாயை பார்க்க வந்த வாலிபரை கொன்று புதைத்த நண்பர்கள் 2 பேர் கைது

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், சென்னையில் வீட்டு வேலை செய்யும் தனது தாயைப் பார்க்க வந்தபோது மாயமானதாக, பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

கடலூர்,

சென்னையில் தனது தாயை பார்க்க வந்த கடலூரைச் சேர்ந்த வாலிபரை அடித்துக் கொன்று கடற்கரையில் புதைத்த நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 19). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர், சென்னையில் வீட்டு வேலை செய்யும் தனது தாய் எழில்செல்வியை பார்க்க கடந்த 27-ந்தேதி வந்துள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. செல்போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.

மகன் மாயம்- புகார்; போலீசார் விசாரணை

மகன் மாயமானது குறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரசாந்தின் நண்பர்களான தேவராசு(19), தினேஷ்(23) ஆகியோர் மாயமான தினத்தன்று அவருடன் அதிகநேரம் செல்போனில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

வாலிபரை அடித்துக் கொன்று கடற்கரையில் புதைத்த நண்பர்கள் 2 பேர் கைது

அதில் பிரசாந்தை சென்னையை அடுத்த பழவேற்காடு கடற்கரை பகுதிக்கு வரவழைத்து அடித்துக் கொலை செய்து புதைத்ததாக திடுக்கிடும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், கடற்கரையில் புதைக்கப்பட்ட பிரசாந்தின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT