தமிழக செய்திகள்

பூந்தமல்லியில் 10 கிலோ கஞ்சா கடத்திய கேரள இளைஞர்கள் 2 பேர் கைது

கேரளாவைச் சேர்ந்த 2 இளைஞர்களை மது விலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை,

ஆவடி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்படி, பூந்தமல்லி மது விலக்கு போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது பூந்தமல்லி புறவழிச்சாலை பேருந்து நிலையம் அருகே போலீசார் கண்காணிப்பில் இருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக கையில் பைகளுடன் நடந்து சென்ற 2 இளைஞர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

கஞ்சா பறிமுதல்

அவர்களிடம் இருந்த பைகளை சோதனை செய்தபோது, இருவரும் தலா 5 கிலோ வீதம் மொத்தம் 10 கிலோ கஞ்சாவை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுஜித் (26) மற்றும் ராய் ஜாய் (20) என்பது தெரியவந்தது. மேலும், ஒடிசா மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து, பூந்தமல்லி பகுதியில் அதிக விலைக்கு வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து பூந்தமல்லி மது விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். பின்னர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பூந்தமல்லி பகுதியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT