சென்னை,
சென்னை மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், வாகனப் பராமரிப்பு சேவை மற்றும் நடமாடும் மளிகைக் கடை என 2 புதிய சேவைகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சி, அமைந்தகரை மற்றும் எழும்பூரில் உள்ள சிறப்புப் பிரிவு நகர்ப்புற வீடற்றோர் காப்பகங்களில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார மேம்பாட்டினைக் கருத்தில் கொண்டு ஹோப் பப்ளிக் சேரிட்டபிள் டிரஸ்ட் (Hope Public Charitable Trust) அமைப்புடன் இணைந்து வாகனச் சுத்தம் மற்றும் பராமரிப்புச் சேவைக்கான தொழிற்பயிற்சி, நடமாடும் மளிகைப் பொருட்கள் விற்பனை அங்காடி உள்ளிட்ட இரண்டு புதிய சேவைகளுக்கான வாகனங்களை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ். மாலதி ஹெலன், இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளி குழந்தைகள் தொழிற்பயிற்சியின் மூலம் தயாரித்த பேக்கரி உணவுப் பொருட்கள் மற்றும் இதர தயாரிப்புகளைக் காட்சிப்படுத்திய உலா வாகனத்தைப் பார்வையிட்டார்.
1. (Hope Clean and Care Service) மொபைல் வாகனச் சுத்தம் மற்றும் பராமரிப்புச் சேவை மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழிற்பயிற்சி அளித்து, வாகனங்களைச் சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்புச் சேவைகள் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
2. (Hope on Wheels – Mobile Provision Store) நடமாடும் மளிகைப் பொருட்கள் விற்பனை அங்காடி மூலம் அத்தியாவசிய மளிகை மற்றும் அன்றாடத் தேவைக்கான பொருட்களைப் பொதுமக்களுக்கு வழங்குவதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் மற்றும் நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குதல்.
இத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, பொருளாதார சுயசார்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன.
சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் அமைந்தகரை மற்றும் எழும்பூரில் செயல்பட்டு வரும் இரண்டு சிறப்புப் பிரிவு நகர்ப்புற வீடற்றோர் காப்பகங்களை Hope Public Charitable Trust தொண்டு நிறுவனம் பராமரித்து வருகிறது. இக்காப்பகங்களில் சுமார் 60 பயனாளிகள் தங்கி, பாதுகாப்பான தங்குமிடம், மருத்துவ உதவி, உணவு மற்றும் மறுவாழ்வுச் சேவைகளைப் பெற்று வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (வடக்கு) சரவணகுமார், தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார், Hope Public Charitable Trust தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் நாகராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.