சென்னை,
தேர்தல் பணியின்போது உயிரிழந்த 2 போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு காவல்துறை இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறைத் தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு காவல்துறையின் அர்ப்பணிப்புள்ள இரு அதிகாரிகளாகிய ராமகிருஷ்ணன் (55 வயது), காவல்துறை துணை கண்காணிப்பாளர், போதைப்பொருள் நுண்ணறிவு முனையம் (Narcotic Intelligence Bureau), ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் கண்ணதாசன் (59 வயது), சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI எண் 1342), மல்லியக்கரை காவல் நிலையம், சேலம் மாவட்டம் ஆகியோர், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026 பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த செய்தி தமிழ்நாடு காவல்துறைக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு சார்பு ஆய்வாளராக பணியில் சேர்ந்த ராமகிருஷ்ணன் (55 வயது), காவல்துறை துணை கண்காணிப்பாளர் போதைப்பொருள் நுண்ணறிவு முனையம் (Narcotic Intelligence Bureau), ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். 23.04.2026 அன்று மாலை சுமார் 5:45 மணியளவில், ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காலாஞ்சிப்பட்டி அருகிலுள்ள விவேகானந்தா பள்ளி பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் கடந்த 30 ஆண்டுகளாக காவல்துறையில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அவருக்கு சந்தானபாமா என்ற மனைவியும் மற்றும் மூன்று மகள்களும் உள்ளனர்.
கடந்த 1993-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த பெ.கண்ணதாசன் (59 வயது), சிறப்பு உதவி ஆய்வாளராக, மல்லியகரை காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தார். தம்மம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கங்காவள்ளி சட்டமன்றத் தொகுதியில் மொபைல் குழு எண் 27-ல் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, நாகியம்பட்டி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 221-ல் தேர்தல் பணியாற்றிக் கொண்டிருந்தபோது 23.04.2026 அன்று மாலை சுமார் 6:10 மணியளவில், திடீரென நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தவரை உடனடியாக மின்னாம்பள்ளி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், சிகிச்சை பலனின்றி சுமார் 8:20 மணியளவில் உயிரிழந்தார். அவர் கடந்த 33 ஆண்டுகளாக காவல்துறையில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அவருக்கு சிவகாமி என்ற மனைவியும், ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு காவல்துறையில் நேர்மை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த இரு அதிகாரிகளும்,சக அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் மரியாதையையும் நம்பிக்கையையும் பெற்றிருந்தனர்.
தேர்தல் பணியில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது உயிர்நீத்த இருவருக்கும், அவரவது சொந்த ஊரில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் காவல்துறை சார்பில் முழு காவல் மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காவல்துறை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.