கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சென்னைக்கு கச்சா எண்ணெய் கொண்டுவரும் 2 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் தவிப்பு: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வருமா?

இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், போர் தீவிரம் அடைந்துள்ளது.

சென்னை,

ஈரான் - இஸ்ரேல் இடையே கடந்த 5 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுடன் கைகோர்த்து அமெரிக்காவும் ஈரான் மீது குண்டு மழை பொழிகிறது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், போர் தீவிரம் அடைந்துள்ளது.

இதற்கிடையே, ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அந்நாட்டு அரசு திடீரென மூடிவிட்டது. இந்த ஜலசந்தி வழியாகத்தான் ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது.

700-க்கும் மேற்பட்ட கப்பல்கள் அணிவகுப்பு

தற்போது, இந்த நீர் வழித்தடம் மூடப்பட்டு உள்ளதால், ஆசிய நாடுகளுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், கப்பல்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க, 700-க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடலில் அணிவகுத்து நிற்கின்றன. கடலுக்கு உள்ளேயே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில், சென்னை துறைமுகத்துக்கு கச்சா எண்ணெய் ஏற்றிவரும் 2 பிரமாண்ட கப்பல்களும் அடங்கும்.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா?

மேலும், இந்தியாவுக்கு சொந்தமான 59 கப்பல்கள் அங்கு காத்திருப்பதாகவும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாலுமிகள், சிப்பந்திகள் 700 கப்பல்களில் சிக்கித் தவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் வரத்து குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

ரஷியா அனுப்ப தயார்

அதே நேரத்தில், இந்தியாவின் நட்பு நாடான ரஷியா 95 லட்சம் எண்ணிக்கையில் கச்சா எண்ணெய் பீப்பாயை இந்தியாவுக்கு அனுப்ப தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதனால், தமிழ்நாடு உள்பட இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாது என்று கூறப்படுகிறது.

கன்டெய்னர் சேவை நிறுத்தம்

அதே நேரத்தில், இந்தியாவில் உள்ள 12 துறைமுகங்களில் இருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி வசதியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், இங்கிருந்து ஆடைகள், உணவு தானியங்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், மருந்துகள், உதிரி பொருட்கள், இதர கருவிகள் உள்ளிட்டவை கொண்டு செல்வது தற்காலிகமாக தடைபட்டுள்ளது.