சேலம்,
சேலம் தொப்பூர் பகுதியில் முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் (எஸ்எஸ்ஐ) திடீரென மயங்கி விழுந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (செவ்வாய்க்கிழமை) சேலம் வருகை தந்துள்ளார். இதையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தொப்பூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்களான (எஸ்எஸ்ஐ) ராஜேந்திரன் மற்றும் மது ஆகிய இருவரும் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக போலீசார், உடனடியாக 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அஸ்பத்திரியில் அனுமதித்தனர். மயக்கமடைந்த 2 சிறப்பு உதவி ஆய்வாளர்களும் ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.