தமிழக செய்திகள்

உதகை அருகே ஊருக்குள் சுற்றித் திரிந்த 2 புலிக்குட்டிகள்

ஒரு புலிக்குட்டியை வனத்துறையினர் பிடித்த நிலையில், மற்றொரு குட்டியை தேடி வருகின்றனர்.

உதகை,

அதிக வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் புலிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களின் அருகிலும், தேயிலை தோட்டங்களிலும் புலிகளை காண முடிகிறது.

இந்த நிலையில் உதகை அருகே சோலாடா கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக தாயை பிரிந்த 2 புலிக்குட்டிகள் விவசாய நிலங்களில் சுற்றி திரிந்தன. இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்த உடன் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அந்த புலிக்குட்டிகள் இருக்கும் இடத்தை தேடி வந்தனர். அதில் ஒரு புலிக்குட்டியை மட்டும் கண்டுபிடித்து தங்களுடன் எடுத்து சென்றனர். மற்றொரு புலிக்குட்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் தாய்ப் புலியின் நிலை குறித்து வனத்துறை விசாரணையை தொடங்கியது. தாய்ப் புலி மற்றும் காணாமல் போன புலிக்குட்டி தொடர்பாக எந்த தகவல் கிடைத்தாலும் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு சோலாடா கிராம மக்களிடம் கேட்டுக்கொண்டனர். மேலும் கண்காணிப்பு கேமரா வைத்தும் தேடி வருகின்றனர்.