நீலகிரி,
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மாயார் சாலையில், 2 புலிகள் அடுத்தடுத்து சாலையைக் கடந்து சென்ற அரிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி - மாயார் வனப்பகுதி வழியாக இன்று (சனிக்கிழமை) சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையோரத்தில் இருந்த அடர்ந்த புதருக்குள் இருந்து முதலில் ஒரு புலி வெளியே வந்து சாலையைக் கடந்தது. அதனைத் தொடர்ந்து, 2-வது புலியும் அதே வழியாக சாலையைக் கடந்து மறுபுறம் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.
புலிகள் சாலையைக் கடப்பதைப் பார்த்த வாகன ஓட்டிகள், உடனடியாக தங்கள் வாகனங்களைத் தூரத்திலேயே நிறுத்தினர். பின்னர், வாகனத்திற்குள் இருந்தபடியே தங்கள் செல்போன்களில் இந்த அரிய காட்சியைப் பதிவு செய்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக கடந்த 22-ம் தேதியும் இதே மாயார் சாலையில் புலி ஒன்று சாலையைக் கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாயார் சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை விட்டு கீழே இறங்க வேண்டாம் என்றும், விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.