திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கனிம வளத்துறை உதவி புவியியலாளர், தனி வருவாய் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் அடங்கிய கூட்டுக்குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது காலை நாட்றம்பள்ளி காவல் எல்லைக்குட்பட்ட கொத்தூர் கிராமத்தில் கனிம வளத்துறை உதவி புவியியலாளர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலம் குப்பத்திலிருந்து நாட்றம்பள்ளி நோக்கி வந்த 2 டிரெய்லர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் உரிய அனுமதியின்றி 30 கன மீட்டர் அளவிலான கலர் கிரானைட் கற்கள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து 2 டிரெய்லர் லாரிகளும் கிரானைட் கற்களுடன் பறிமுதல் செய்யப்பட்டு நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா மற்றும் இதர அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் அனுமதியின்றி கனிமங்களை கடத்த முயன்றால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.