சென்னை,
சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் தினமும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். அலுவலக பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் மின்சார ரெயில்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு ரெயில்கள் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருமின்சார ரெயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் பாதுகாப்பு நடவடிக்கையாக உடனே நடுவழியில் நிறுத்தப்பட்டது. ஒரே தண்டவாளத்தில் இரு ரெயில்கள் வந்ததை உணர்ந்த பயணிகள், பீதியில் ரெயிலில் இருந்து குதித்து வெளியே ஓடினர். பயணிகள் நடுவழியில் இறங்கி தண்டவாளத்தில் ஆபத்தான முறையில் நடந்து சென்றனர்.
விபத்தை தவிர்க்க நடுவழியில் இரு ரெயில்களும் எழும்பூர்- சேத்துப்பட்டு இடையே நிறுத்தபட்டது. ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் வந்ததால் தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.
ரெயிலுக்கு தண்டவாளத்தை மாற்றி தரும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட சிக்கலால் இது நேரிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.