விமானம் புறப்பட்டு செல்வதை பார்க்கும் ஆசையில், மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் பரளச்சி பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 22). திருச்சுழி உடைய சேவைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன் (24). இருவரும் நண்பர்கள். கட்டிட தொழிலாளர்கள். சில நாட்களாக இருவரும் மதுரை திருப்பாலை பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தனர். கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக, பாண்டித்துரை, முனீஸ்வரன் ஆகியோர் திருப்பாலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.
மதுரை விமான நிலையம் பகுதியில் சின்னஉடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது விமான நிலையத்தில் நின்றிருந்த விமானம் புறப்பட்டு. ஓடுபாதையில் வருகிறதா? என எட்டிப்பார்த்தபடி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
இதில் நிலைதடுமாறிய மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த சாலையோர தடுப்பில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். சிறிது நேரத்திலேயே பாண்டித்துரை, முனீஸ்வரன் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் பெருங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சோக சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.