சென்னை,
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக, த.வெ.க. தலைவர் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியமேடு அருகே உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், நிர்வாகிகளும், திரைத்துறை பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கும் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், கழக பொதுச்செயலாளர் மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாவற்றுக்கும் மேல் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான நன்றி!
கழகத்தலைவரின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியாக மக்களின் குரலை நாங்கள் எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம்.
எங்கள் தலைவர் சொன்னது போல், எதிரிக்கட்சியாக இல்லாமல், ஒரு நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம். மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமாக நாங்கள்தான் இனி இருப்போம்.
என் மேல நம்பிக்கை வைத்து மக்கள் கொடுத்திருக்கும் இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்!”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.