சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (25.2.2026) தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கண்ணகி நகரில் 4.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகத்தை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் திட்டப் பகுதிகளில் 23,704 குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டப் பகுதியில் 4.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11,162 சதுர அடி நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் தரைத்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களுடன் 11,572 சதுர அடி பரப்பளவில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நவீன நூலகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் வரவேற்கும் இடம், புத்தகங்கள் வைத்திருக்கும் இடம், குழந்தைகளுக்கான புத்தகங்கள் மற்றும் விளையாடும் இடம், பயிற்சி அறை, திறந்த நிலை பயிலும் இடம், 10,000 லிட்டர் நீர்த்தேக்கத் தொட்டி, கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று இந்த நூலகத்தை திறந்து வைத்த தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நூலகத்தில் தினசரி நாளிதழ்கள் பிரிவில் வாசகர்கள் நடப்பு செய்திகளை குறிப்பு எடுப்பதை பார்வையிட்டு அவர்களிடம் கலந்துரையாடினார். மேலும் குழந்தைகள் பிரிவில் அவர்களுடன் உரையாடி குழந்தைகளுக்கு பிடித்த புத்தகங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, துணை மேயர் மு. மகேஷ் குமார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி. சிங், நிலைக்குழுத் தலைவர் த. விசுவநாதன், மண்டலக்குழுத் தலைவர்கள் எஸ். வி. ரவிச்சந்திரன், வி. இ. மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.