சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கவும், சென்னையை உலகின் முக்கியமான நகரமாக உருவாக்கவும் அனைத்து துறைகளின் சார்பாக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதோடு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய பேருந்து முனையங்கள் அமைத்தல், பேருந்து நிலையங்களை பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளோடு மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.
அதனடிப்படையில் சென்னை பெருநகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் அடிப்படையில் (CCP-SUSP), உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) பங்களிப்புடன், சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 625 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூவிருந்தவல்லி, மத்திய பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட ஐந்து பணிமனைகள் மூலம் 697.00 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாழ்தள மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர், 30.6.2025 அன்று வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையை, திறந்து வைத்து, 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 11.8.2025 அன்று 49.56 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பெரும்பாக்கம் மின்சாரப் பேருந்து பணிமனையைத் திறந்து வைத்து, 135 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
மூன்றாம் கட்டமாக தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் .உதயநிதி ஸ்டாலின், 19.12.2025 அன்று மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 43.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பூவிருந்தவல்லி மின்சாரப் பேருந்து பணிமனையை திறந்து திறந்து வைத்து, 125 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இன்று நான்காவது கட்டமாக தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 52.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்ட மத்திய மின்சாரப் பேருந்து பணிமனையை திறந்து வைத்து, 248.25 கோடி ரூபாய் மதிப்பிலான 100 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் 45 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 30.50 கோடி ரூபாய் மதிப்பிலான இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய 49 அதிநவீன சொகுசு பேருந்துகளின் இயக்கத்தினையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் புதிய தாழ்தள பேருந்துகளில் உள்ள சிறப்பு அம்சங்கள்
உலகின் முக்கியமான நகரமாக உருவாகி வரும் சென்னையில் பொதுமக்கள் அனைவரும் பொதுப்போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள், தாழ்தள மின்சாரப் குளிர்சாதனப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தரையில் இருந்து 40 செ.மீட்டர் (400 மி.மீ) உயரம் கொண்ட தாழ்தள மின்சார பேருந்தின் உயரத்தை, தேவையான நேரத்தில் பேருந்து ஓட்டுநர் 25 செ.மீட்டர் (250 மி.மீ) உயரம் வரை குறைத்து மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பேருந்துகளில் எளிதாக ஏறி, இறங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் எளிதாக அமரும் வகையில் இருக்கைகள் ஒரே சமதளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தாழ்தள மின்சாரப் பேருந்துகளில் இருக்கைகளின் பக்கவாட்டு இடைவெளி 65 செ.மீட்டருக்கு (650 மி.மீ.) பதிலாக 70 செ.மீட்டர் (700 மி.மீ) அகலம் உள்ளதால், நின்று செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.
மேலும், மகளிருக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திடும் வகையில், தாழ்தள மின்சாரப் பேருந்துகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்ய மாதாந்திர பயணச் சீட்டு ரூ.2,000/- அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்ட 100 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் 45 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் திருவான்மியூர் - கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கம் (KCBT), தீவுத்திடல் - கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கம் (KCBT), இராயபுரம் - கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கம் (KCBT), எம்.ஜி.ஆர் சென்ட்ரல் – திருவான்மியூர், தீவுத்திடல் – கோவளம், இராயபுரம் - பூவிருந்தவல்லி, எம்.ஜி.ஆர் சென்ட்ரல் – அண்ணாசதுக்கம், தீவுத்திடல் – செங்குன்றம், இராயபுரம் – தரமணி பேருந்து நிலையம், இராயபுரம் - திருநின்றவூர், இராயபுரம் - ஆவடி, இராயபுரம் - தாம்பரம் மேற்கு ஆகிய பன்னிரெண்டு வழித்தடங்களில் இயக்கப்படும்.
மாநகர் பேருந்துகளில் தற்போது வசூலிக்கப்படும் கட்டணமே, புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளிலும் வசூலிக்கப்படும். ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் சலுகை கட்டண பயண அட்டைகளையும் இந்த தாழ்தள மின்சாரப் பேருந்துகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ரா.மோகன், மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குனர் ராம. சுந்தரபாண்டியன், ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமை வணிக அலுவலர் ஆர்.ஜி.வெங்கட்ராமன், அசோக் லேலண்டு ஓ.எச்.எம் நிறுவனத்தின் தலைமை இயக்க அலுவலர் இ.நாகராஜன், உயர் அலுவலர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.