சென்னை,
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்/சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தேனாம்பேட்டை மண்டலத்தில் ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறுவர்கள் விளையாட்டுத் திடல் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் மற்றும் விவேகானந்தர் இல்லம் பேருந்து நிறுத்தம் நிழற்குடையினை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
இன்று (29.11.2026) சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்/சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-114க்குட்பட்ட மெரினா நீச்சல் குளம் அருகில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் 2025-2026ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடத்தினை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
இந்த திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதியானது 1017 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உடற்பயிற்சி உபகரணங்கள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், கலைநயமிக்க இழுவிசை மென்படல நீள்வடிவ கூரை (Aesthetic Tensile membrane elongated roofing), ரப்பர் நடைபாதை (EPDM Rubber Mat) உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வார்டு-116க்குட்பட்ட டாக்டர் பெசன்ட் சாலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிமற்றும் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமாரின் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் கீழ் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட விவேகானந்தர் இல்லம் பேருந்து நிழற்குடையினை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்/சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
இந்த பேருந்து நிழற்குடையானது 1076 சதுர மீட்டர் பரப்பளவில் அழகியல் சார்ந்த நீட்சி சவ்வு கூரை அமைப்பு (Aesthetic Tensile membrane elongated roofing), நவீன மின்சாரப் பேருந்துகளின் இயக்கம் குறித்த தகவல் பலகை, மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதி, தாய்ப்பால் ஊட்டும் அறை, நேரக் கண்காணிப்பாளர் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் மேயர் ஆர். பிரியா, மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கவுஷிக், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.பி.எம். காமராஜ் (எ) தனசேகரன், மண்டல அலுவலர் எஸ்.செந்தில்குமரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.