சென்னை,
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு இன்று காலையே ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு. சட்டமன்றத் தேர்தலைக் காட்டி அடுத்த சில மாதங்களுக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை’ தடுக்கப் பார்த்தவர்கள், வாயடைத்துப் போகும் வகையில், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம், கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என, 1.31 கோடி மகளிரின் வங்கிக்கணக்கில் இன்று காலை ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பாக்கும் வகையில், திராவிட மாடல் 2.0-ல் மகளிருக்கான உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என்றும் நம் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு மகளிர் வெல்லும்_தமிழ்_பெண்கள் -ஆக நடைபோட என்றும் துணை நிற்போம். வெல்வோம்_ஒன்றாக! அன்பும், வாழ்த்தும்!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.