சென்னை,
தமிழக முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் (51) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் 17-வது சட்டசபை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணத்தை தற்காலிக சபாநாயகர் கருப்பையா செய்து வைத்து வருகிறார். முதல் நபராக முதல்-அமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்பு மற்ற எம்.எல்.ஏ.க்கள் பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி என்ற முறையில் திமுகவின் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார்.
பொதுவாக முதல்-அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் பரஸ்பரம் தன்னுடைய மரியாதையை தெரிவித்துக் கொண்டு பதவி ஏற்பது தான் இது நாள் வரை சட்டப்பேரவையில் வழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால் இன்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சருக்கு பரஸ்பர மரியாதை கூட செலுத்தாமல் பதவி ஏற்று கொண்டார்.