திருப்பூர்,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் உடுமலை வனப்பகுதி மீண்டும் பசுமைக்குத் திரும்பியுள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கான உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு தற்காலிகமாக நீங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இங்கு ஈட்டி, சந்தனம், வெள்வேல், வாகை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் வளர்ந்துள்ளன.
இந்த வனப்பகுதிகளை யானைகள், புலிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், கடமான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்விடமாகக் கொண்டுள்ளன. இவற்றுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வழங்கி வருகிறது.
கோடைகாலத்தில் வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகளில் நீர்வரத்து குறைந்துவிடுகிறது. மேலும், அங்கு வளர்ந்துள்ள மரங்கள், புற்கள், செடிகள் உள்ளிட்ட தாவரங்களும் காய்ந்து விடுகின்றன.
இதனால் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாக, சில வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அடிவாரப் பகுதிகளுக்கு வருகின்றன.
அவ்வாறு வரும் வனவிலங்குகளுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கும் இடமாக அமராவதி அணைப் பகுதி விளங்குகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. வனப்பகுதியில் மரங்கள், செடிகள், புற்கள் உள்ளிட்டவை பசுமையாகக் காட்சியளிக்கின்றன. கண்களுக்கும் மனதிற்கும் இதமளிக்கும் வகையில் வனப்பகுதி பசுமைக்குத் திரும்பியுள்ளது.
தொடர் மழையால் வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பது அதிகரித்துள்ளது. இதனால் யானைகள், காட்டெருமைகள், கடமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவைகள் தற்காலிகமாகப் பூர்த்தியாகியுள்ளன.
கோடைகாலத்தில் ஏற்பட்ட தீவனத் தட்டுப்பாடு தற்போது குறைந்துள்ளதால், வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் தற்காலிகமாகக் குறைந்துள்ளது.