உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் புதிய தேருக்கான வெள்ளோட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
சிற்ப வேலைப்பாடு
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா என்பது சுற்றுவட்டார கிராம மக்களின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சுமார் 100 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த பழமையான தேருக்குப் பதிலாக ரூ 53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. எண்கோண வடிவில் மர சிற்ப வேலைப்பாடுகளுடன் 5 நிலைகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்ட இந்த தேர் தயார் நிலையில் உள்ளது.
இந்த தேரின் மொத்த உயரம் 12 அடியாக உள்ள நிலையில், தேர்ப்பலகை 9 அடி உயரத்திலும், உற்சவருக்கான சிம்மாசனம் 2 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. இந்த தேரை உருவாக்குவதற்காக இலுப்ப மரம் மற்றும் தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேரில் அம்மன் தலங்கள் குறித்த வரலாற்று சிற்பங்கள், சிவன், விஷ்ணு, முருகன், விநாயகர் உள்ளிட்ட 220 மரச்சிற்பங்களும், 120 பொதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
தேர் வெள்ளோட்டம்
கண்ணைக்கவரும் சிற்ப வேலைப்பாடுகளுடன் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தேரைக் கண்டு ரசிப்பதற்கு பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் புதிய தேர் நிலைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி நடைபெற்றது. இதனையடுத்து இன்று(வியாழக்கிழமை) புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.
இன்று காலை 9.45 மணிக்கு மங்கள இசை, அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 10.30 மணிக்கு தேவதா ஹோமத்தைத் தொடர்ந்து புதிய தேர் பிரதிஷ்டா ஹோமங்கள் நடைபெறுகிறது. நண்பகல் 1 மணிக்கு புதிய தேர் கும்ப ப்ரோக்க்ஷனம், ஸ்தாபனம், பலிதானம், மஹா தீபாராதனை நடைபெறும். மாலை 4 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 13-ந்தேதி தேரோட்டம்
வழக்கமான தேரோடும் வீதிகளில் நடைபெற உள்ள இந்த வெள்ளோட்டத்துக்காக தளி சாலை, சதாசிவம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை நவீன எந்திரங்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது. மேலும் தேரை வெள்ளோட்டத்துக்கு தயார்படுத்தும் பணிகள் தேர் நிலையில் நடைபெற்று வருகிறது.
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வரும் மார்ச் மாதம் 28-ந்தேதி நோம்பு சாட்டுதலுடன் தொடங்கி, உச்ச நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஏப்ரல் மாதம் 13-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த வெள்ளோட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.