கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு எழுத வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு, தேர்வு மையங்களின் நுழைவாயில்கள் மூடப்பட்டதால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் மாநிலம் முழுவதும் இன்று குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வுகள் நடைபெற்றன. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வர்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 28 தேர்வு மையங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் இந்தத் தேர்வை எழுதுவதற்காக 8,232 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
தேர்வு தொடங்குவதற்கு முன்னதாகவே தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களுக்குச் சென்று இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, காலை 9 மணிக்கு தேர்வு மையங்களின் நுழைவாயில்கள் மூடப்பட்டன.
இதற்கிடையே, பல்வேறு காரணங்களால் தாமதமாகத் தேர்வு மையங்களுக்கு வந்த தேர்வர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதால் அவர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.
தேர்வு எழுத வந்தும் தாமதமாக வந்த காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வர்கள், கள்ளக்குறிச்சி - சென்னை சாலையில் திரண்டனர். தொடர்ந்து அந்த வழியாக வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்து, தேர்வு மையத்திற்கு வந்த தங்களுக்கு அனுமதி வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கள்ளக்குறிச்சி - சென்னை சாலையில் பரபரப்பான சூழல் நிலவியது. தேர்வர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத வந்தவர்கள் அனுமதி மறுக்கப்பட்டதால் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.