சென்னை,
சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர்.
சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் ஆ.ராசா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ. ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக ஆர்ப்பாட்டத்தில் கட்சியினரின் அநாகரிக பேச்சு சர்ச்சையான நிலையில் அதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற திருக்குறளை பதிவிட்டுள்ளார். எதைக் காக்கத் தவறினாலும் நாவை காக்க வேண்டும் என்பதை கண்டிக்கும் வகையில் இந்த குறளை கனிமொழி பகிர்ந்துள்ளார்.