தொண்டி,
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி, தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இவர் தேவகோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவி வசித்து வந்த வீட்டில் அவரது சித்தி குடும்பத்தினரும் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த மாணவியை அவருடைய சித்தப்பா மகேந்திரன் (வயது 39) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது மாணவி, 3 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் குழந்தைகள் நல அலுவலர்கள் உரிய விசாரணை நடத்தி திருவாடானை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகேந்திரனை கைது செய்தனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ், இதுகுறித்து விசாரித்தார்.
மாணவியை கர்ப்பமாக்கிய மகேந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதைதொடர்ந்து அதற்கான உத்தரவை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் பிறப்பித்தார். இதையடுத்து மகேந்திரன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.