தமிழக செய்திகள்

அறிவிக்கப்படாத அவசரநிலை: ஜனநாயகத்தை காப்பவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள் - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

எஸ்.ஐ.ஆர்-க்கு பின்னாலுள்ள சதித்திட்டம் முழுமையாக அம்பலமாகிவிட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், எஸ்.ஐ.ஆர். கைவிடப்பட வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அறிவிக்கப்படாத அவசரநிலை

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

அறிவிக்கப்படாத அவசரநிலை: ஜனநாயகத்தை காப்பவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள், ஆனால் அதற்கு துரோகம் இழைப்பவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்!

மக்களின் வாக்குரிமையை காக்கப் போராடும் முன்னாள் முதல்-மந்திரிகளான பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி மற்றும் மணிக் சர்க்கார், சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோரை மத்திய பா.ஜ.க. அரசு சிறைபிடித்துள்ளது.

அவமானம்

அதேவேளையில், தேசத்துரோக செயலுக்காக விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார், 'Z+' பாதுகாப்புடன் சுதந்திரமாக வலம் வருகிறார்!

எவ்வளவு பெரிய அவமானம்!

SIR-க்கு (தேர்தல் ஆணையர் நியமனச் சட்டம்) பின்னாலுள்ள சதித்திட்டம் முழுமையாக அம்பலமாகிவிட்டது. இனி அதை மறைக்க முடியாது! டெல்லியில் தடுப்புகளை அமைப்பதோ, இணைய சேவையை முடக்குவதோ அல்லது அரசியல் தலைவர்களைச் சிறைபிடிப்பதோ இந்திய இளைஞர்களின் எழுச்சியை ஒடுக்க முடியாது. ஒரு முழு தேசத்தையும் மத்திய அரசு எவ்வளவு காலத்திற்கு முற்றுகையிலேயே வைத்திருக்க முடியும்?

தனது எஜமானர்களை..

இதற்கிடையில், தமிழ்நாட்டில் உள்ள திறமையற்ற TVK அரசு, SIR-க்கு எதிராகவும் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தியும் போராடிய சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் சண்முகம் மற்றும் பிற செயல்பாட்டாளர்களை சிறைபிடித்து, டெல்லியில் உள்ள தனது எஜமானர்களை திருப்திப்படுத்த தீவிரமாக முயன்று வருகிறது.

சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், SIR கைவிடப்பட வேண்டும், மேலும் இந்திய மக்களுக்கு துரோகம் இழைத்ததற்கு பொறுப்பான அனைவரும் பொறுப்புக்கூற செய்யப்பட வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT