சென்னை,
தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை என முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
விளைந்த பயிரைக் கருகாமல் காப்பாற்றத் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம்! இதைவிட ஒரு டெல்டா விவசாயிக்கு வேறென்ன கொடுமை வேண்டும்!
காவிரியில் 11 TMC பற்றாக்குறை நீரை பெற சரியான வாதங்களை எடுத்து வைக்கத் திறனில்லாத தவெக அரசின் இரண்டு மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!
மேட்டூர் அணையிலும் தண்ணீர் இல்லை. பருவ மழையும் பெய்யவில்லை. இதைப் பற்றி அரசுக்கு கொஞ்சம் கூட அக்கறையும் இல்லை! இதனால் டெல்டாவில் சம்பா பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்!
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியபடி, அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்!
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியபடி வறட்சிப் பாதிப்பைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குங்கள்!
விவசாயிகளுக்குத் தேவை வெற்று வாக்குறுதிகள் அல்ல… தண்ணீரும் வாழ்வாதாரப் பாதுகாப்பும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.