திருவள்ளூர்,
திருமுல்லைவாயலில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை தோண்டும் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் சாலையில் நடப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆவடி மாநகராட்சி அருகே திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக சில மாதங்களுக்கு முன்பு பல குழிகள் தோண்டப்பட்டன. பணிகள் தாமதமாக நடைபெறுவதால் குழிகள் இதுவரை முழுமையாக மூடப்படவில்லை. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வீடுகளில் கழிவு நீர் செல்வதோடு, சாலையில் நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்தில் சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தேங்கிய நீர்களால் பல்வேறு பிரச்சனைகள் உடல் நிலை பாதிப்புகள் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாக நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் என மண்டலக்குழுத் தலைவரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை நீர் தேங்குதல் மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பணிகள் முடிக்கப்படும் என மண்டலக்குழுத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.