மத்திய அரசு செயலாளர் மற்றும் ககன்தீப் சிங் பேடி  
தமிழக செய்திகள்

சென்னையில் மத்திய அரசு செயலாளர் மற்றும் ககன்தீப் சிங் பேடி நேரில் ஆய்வு

சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலை, நாளொன்றுக்கு 140 மெட்ரிக் டன் ஈரக்கழிவுகளை செயலாக்கும் திறன் கொண்டதாகும்.

சென்னை,

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அரசு செயலாளர் சடேந்திர சிங், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்ககன்தீப் சிங் பேடி, முன்னிலையில் சென்னை மாநகராட்சியில் சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலை, கோயம்பேடு சுத்திகரிப்பு நிலையம், மூன்று சக்கர மின்கல வாகனங்களின் பராமரிப்பு பணிமனை மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் ஆகியவற்றின் செயல்பாடுகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

சடேந்திர சிங்

இன்று மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அரசு செயலாளர் சடேந்திர சிங், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர்ககன்தீப் சிங் பேடி முன்னிலையில், அண்ணாநகர் மண்டலம், சேத்துப்பட்டில் மாநகராட்சியின் சார்பில் பொது தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் உயிரி எரிவாயு ஆலையில் ஈரக் கழிவுகளிலிருந்து உயிரி எரிவாயு உற்பத்தி செய்திடும் செயல்பாட்டினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

6,150 மெட்ரிக் டன் குப்பைகள்

சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் 6,150 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றில், சுமார் 3,200 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகளாகவும், 2,950 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் மற்றும் சாலையோரத்தில் இருக்கும் மண் துகள்களாகவும் சேகரிக்கப்படுகின்றன.

உயிரி எரிவாயு ஆலை

சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலை, நாளொன்றுக்கு 140 மெட்ரிக் டன் ஈரக்கழிவுகளை செயலாக்கும் திறன் கொண்டதாகும். தற்போது, சென்னை மாநகராட்சியால் தரம் பிரித்து சேகரித்து வழங்கப்படும் சுமார் 120 முதல் 140 மெட்ரிக் டன் ஈரக்கழிவுகள் நாள்தோறும் இந்த ஆலையில் செயலாக்கப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-127க்குட்பட்ட கோயம்பேடு, காளியம்மன் கோவில் தெருவில் இயங்கி வரும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சுத்திகரிப்பு நிலையம்

சென்னை மாநகரின் நீர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சுழற்சி நீர் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தவும். கோயம்பேட்டில் நாளொன்றுக்கு தலா 45 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நாளொன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.

சக்கர மின்கல வாகனங்கள்

பின்னர், காளியம்மன் கோவில் தெருவில் சுமீத் எல்கோ சார்பில் குப்பைகள் சேகரிக்க பயன்படுத்தப்படும் மூன்று சக்கர மின்கல வாகனங்களின் பராமரிப்பு பணிமனை மற்றும் சார்ஜிங் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ச்சியாக, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பயோ மைனிங் முறையில் திடக்கழிவுகளை பிரித்தெடுக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பயோமைனிங்

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தின் பரப்பளவு 333 ஏக்கர் ஆகும். இதில் 252 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. ரூ.641 கோடி மதிப்பீட்டில் கொடுங்கையூரில் உள்ள திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து அகற்றும் பணி 6 சிப்பங்களாக ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 6 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் த ஆனந்த், மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையாளர் (சுகாதாரம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், மற்றும் திடக்கழிவு மேலாண்மை துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT