தமிழக செய்திகள்

பாஜகவின் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் என கூறிய உதயநிதி ஸ்டாலின்... பதிலடி கொடுத்த மத்திய மந்திரி

மக்கள் விரோத ஆட்சி, கொள்கைகளால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டது என்று மத்திய மந்திரி கூறினார்.

சென்னை,

திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,

பாஜகவின் தொடர் வெற்றிக்கு மோடியும், அமித்ஷாவும் தான் காரணமென நான் நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்கு காங்கிரஸ் தான் காரணமென இப்போது தெரிகிறது. காங்கிரசை எந்த காலத்திலும் நம்பக்கூடாது, காங்கிரசை சேர்க்கவே கூடாது’ என்றார்.

இந்நிலையில், பாஜகவின் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் என கூறிய உதயநிதி ஸ்டாலினுக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை வந்துள்ள தர்மேந்திர பிரதான் இது குறித்து கூறியதாவது,

ஜனநாயகத்தில் மக்கள்தான் தலைவர்கள். யாரை தேர்ந்தெடுக்கவேண்டும் என அவர்கள்தான் முடிவு செய்வார்கள். மக்கள் விரோத ஆட்சி, கொள்கைகளால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டது. அந்த விரக்தியில் திமுகவினர் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கின்றனர்.

என்றார்.