சென்னை,
யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அக்டோபர் 15 முதல் ரூ.2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வர்த்தகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 2 விழுக்காடு வரை கட்டணம் வசூலிக்கப்படும். இக்கட்டணம் வர்த்தகர்களுக்கு மட்டுமே பொருந்தும், சாதாரண நுகர்வோருக்கு யுபிஐ சேவைகள் எப்பொழுதும் போல இலவசமாக வழங்கப்படும் என இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது.
வர்த்தகர்களுக்கு மட்டுமே இக்கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டாலும் கூட, ரெயில்வே, தொலைத்தொடர்பு, பெட்ரோல் பங்க், காப்பீட்டு பிரீமியம், மின்சாரம், தண்ணீர் பயன்பாடு போன்றவற்றிற்கான கட்டணங்களுக்கு, அக்கட்டணம் ரூ.2,000-க்கு மேல் இருந்தால், அதற்கு ரூ.5 நிலையான கட்டணமாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இக்கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. இக்கட்டண வசூல் பொதுமக்களை நேரடியாக கடுமையாக பாதிக்கும்.
வர்த்தகத்திற்கு யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்தை நடைமுறைப்படுத்தினால், அந்தக் கட்டணச் செலவும், பொருட்களின் மீதே ஏற்றப்படும். அதனால் விலைவாசி உயர்வு ஏற்படும். யுபிஐ சேவைக்கு கட்டணம் வசூலிப்பது, இச்சேவையை வழங்கிவரும் பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்குமே, நிதி மூலதனத்திற்குமே சாதகமானதாகும். அவற்றின் லாப வேட்கைக்கு இரை போடுவதாகவே அமையும்.
ஒன்றிய பாஜக அரசு இதுபோன்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதும், சாதாரண மக்களுக்கு எதிராக செயல்படுவதும் கடுமையான கண்டனத்திற்குரியது. எனவே, உடனடியாக யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.