கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்களுக்கு ஒரு மாதகால ஆளுமைத் தேர்வு பயிற்சி

ஆளுமைத் தேர்வு பயிற்சி வருகிற 23-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்களுக்கு ஒரு மாதகால ஆளுமைத் தேர்வு பயிற்சி நடத்தப்பட உள்ளது. இந்த ஆளுமைத் தேர்வு பயிற்சியில் பங்கு பெற விரும்பும் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஆர்வலர்கள் பயனடையும் வகையில், இப்பயிற்சி மையம் திறம்பட செயல்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இப்பயிற்சி மையத்தில் 2026-ம் ஆண்டில் முதன்மைத் தேர்வுக்கு பயின்ற ஆர்வலர்களில் 29 மகளிர், 4 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 1 மூன்றாம் பாலினத்தவர் உட்பட 79 ஆர்வலர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தற்போது, இம்மையத்தின் சார்பாக முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்களுக்கு ஒரு மாதகால ஆளுமைத் தேர்வு பயிற்சி (23-11-2026 முதல் 20-12-2026 ) வரை நடத்தப்பட உள்ளது. இம்மாதிரி ஆளுமைத் தேர்வு பயிற்சியில் பங்கு பெற விரும்பும் ஆர்வலர்கள், 22.11.2026 மாலை 5 மணிக்குள் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது நேரடியாக இம்மையத்திலும் பதிவு செய்துகொள்ளாலாம் .

இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற ஆர்வலர்களும் இம்மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி ஆளுமைத் தேர்வுப் பயிற்சியில் பங்கு பெற அனுமதிக்கப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு, 044-24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9345766957 என்ற புலன எண் (Whatsapp) மூலமாகவும், aicscc.gov@gmail.com என்ற அலுவலக மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT