தமிழக செய்திகள்

பல்கலைக்கழகங்களில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும் - வேல்முருகன்

தமிழ்நாட்டின் உயர்கல்வியின் வளர்ச்சி ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சேர்க்கை விகிதம் உயர்வு

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உயர்கல்வித் துறை அமைச்சருக்கு தமிழக முதல்-அமைச்சர் தக்க ஆலோசனைகளை வழங்கி, கவர்னரை நேரில் சந்தித்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பான கடந்த கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இந்தியாவில் உயர்கல்விச் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு 49 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளது. தேசிய சராசரி 28 சதவீதமாக உள்ள நிலையில், கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 54 சதவீதம் வரை உயர்ந்திருந்தது.

துணைவேந்தர் பதவி காலி..

தமிழ்நாட்டில் 22 மாநிலப் பல்கலைக்கழகங்கள் உட்பட மொத்தம் 61 பல்கலைக்கழகங்கள் உள்ளன. உயர்கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (சென்னை), சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருப்பூர் அன்னை தெரேசா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 11 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளது.

இதோடு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் துணைவேந்தர் பதவி நிரப்பப்படவில்லை. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 16-ல் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது.

அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை

கடந்த ஆட்சியில் கவர்னர் ரவி பொறுப்பேற்ற பிறகு, துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடல் குழுவில் யு.ஜி.சி. விதிகளின்படி யு.ஜி.சி. பிரதிநிதிகளை கூடுதலாகச் சேர்க்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்கு அப்போதைய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தன்னிச்சையாக தேடல் குழுவை நியமித்து கவர்னருக்கு அனுப்புவது, கவர்னர் நிராகரிப்பது என ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.

தமிழ்நாட்டில் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் என மொத்தம் 188 அரசு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 105 கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் நிரப்பப்படவில்லை. பொறுப்பு முதல்வர்களைக் கொண்டே கல்லூரிகள் இயங்கி வருகின்றன. முதல்வர் நியமன விவகாரத்தில் பதவி மூப்பு தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகும், அதிகாரிகள் முதல்வர்களை நியமிக்க ஆர்வம் காட்டவில்லை.

7,500 பணியிடங்கள் காலி..

188 கல்லூரிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 7,500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தியாவிலேயே பழமையான பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தில் 67 சதவீதம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 65%, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 60%, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 55%, அழகப்பா பல்கலைக்கழகத்தில் 42%, அண்ணா பல்கலைக்கழகத்தில் 34% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால், செனட், சிண்டிகேட் கூட்டங்கள் நடைபெற முடியாமல் பல்கலைக்கழகங்களின் நிர்வாகமும் கல்விப் பணிகளும் முடங்கியுள்ளன. சென்னை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவே ஒவ்வொரு மாதமும் திண்டாட்டம் நிலவுகிறது.

துணைவேந்தர்கள் இல்லாததால் NIRF, NAAC போன்ற தரவரிசைப் பட்டியல்களில் கவனம் செலுத்த முடியவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டங்களைப் புதுப்பிக்க முடியவில்லை. புதிய பாடத்திட்டங்களுக்கு அனுமதி பெற முடியவில்லை. சர்வதேச ஆராய்ச்சித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், ஆராய்ச்சி நிதி பெறவும் முடியாத நிலை உள்ளது.

வளர்ச்சி முடங்கியுள்ளது

துணைவேந்தர், முதல்வர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களின் பெருமளவு காலிப்பணியிடங்கள் காரணமாக தமிழ்நாட்டின் உயர்கல்வியின் வளர்ச்சி ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது. உயர்கல்வியில் அதிக மாணவர்களைச் சேர்ப்பது மட்டும் சாதனையல்ல; பட்டம் முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு கல்விக்கு ஏற்ற வேலைவாய்ப்பு கிடைப்பதுதான் உண்மையான வளர்ச்சியின் அளவுகோலாகும்.

எனவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உயர்கல்வித் துறை அமைச்சருக்கு தமிழக முதல்-அமைச்சர் தக்க ஆலோசனைகளை வழங்கி, கவர்னரை நேரில் சந்தித்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பான கடந்த கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.