சென்னை,
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த 25-ம் தேதி தனது பெற்றோருடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினரான குமரேசன் (39) என்பவரது வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் குடும்பத்துடன், சிறுவாபுரி முருகன் மற்றும் பெரியபாளையம் பவானியம்மன் கோவில்களுக்கு சென்று வந்தனர்.
அதைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் 26-ம் தேதி சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் சிறுவன் மட்டும் உறவினர் வீட்டில் 2 நாள் தங்கியிருந்து வருவதாக கூறியதால் அவரை மட்டும் அங்கு விட்டுச் சென்றனர். இந்நிலையில், 27-ம் தேதி இரவு குமரேசன், தனது நண்பரான வேலப்பன் (35) என்பவரை வீட்டுக்கு அழைத்து வந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
சிறிது நேரத்தில் குமரேசன் மதுபோதையில் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார். ஆனால், போதையில் இருந்த வேலப்பன், அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை எழுப்பி அவரது வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியுள்ளார். மேலும், சிறுவனிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால், பயமும் அதிர்ச்சியும் அடைந்த சிறுவன் கத்தி கூச்சலிட்டதோடு, அருகில் இருந்த டிவி ரிமோட்டால் வேலப்பனின் தலையில் தாக்கிவிட்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பினார்.
மேலும் அவர் அசோக் நகர் காவல் நிலையத்துக்கு ஓடிச் சென்று, நடந்த சம்பவத்தைக் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து போலீசார் வேலப்பனையும், போதையில் தூங்கிய குமரேசனையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் வேலப்பன் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, ஆர்-8 வடபழனி காவல் நிலையத்தில் குற்றப் பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் வேலப்பனை சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அதிரடியாகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 311-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.