தமிழக செய்திகள்

வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

வைகை அணையின் நீர்மட்டம் 35.79 அடியாக உயர்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது.

தேனி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் தண்ணீர் முலம் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து பயன்பெற்று வருகிறது. மேலும் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு ஜீவாதாரமாக விளங்கி வருகிறது. இந்தநிலையில் எப்போதும் இல்லாத அளவில் இந்தாண்டு கடந்த ஜூன் மாதம் வைகை அணையின் நீர்மட்டம் வெறும் 20 அடியாக சரிந்தது.

இதனால் அணையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து குடிநீர் திட் டங்களும் நிறுத்தப்பட்டது. இது தவிர ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத் திற்கும் திறக்கப்பட்ட தண்ணீர் இந்தாண்டு திறக்க முடியாமல்போனது.

நீர்மட்டம் உயர்வு

இந்த நிலையில் கேரளத்தில் திடீரென பெய்த மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்தத் தண்ணீர் வைகை அணைக்கு வரத் தொடங்கியதால் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இதனால் தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 35.79 அடியாக உயர்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது.

இந்த நீர்மட்டம் படிப்படியாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.