பழனி,
பழனி முருகன் கோவிலில் நேற்று வைகாசி மாதத்திற்கான கார்த்திகை உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் பல்வேறு வண்ண மலர்களால் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.
கார்த்திகை உற்சவத்தையொட்டி மாலை 6 மணிக்கு கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பின்னர் 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் தங்கரதத்தில் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.