சென்னை,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, ஆவினங்களுக்கும், நிலத்துக்கும் நன்றி செலுத்தி மாசி, பங்குனியில் வசந்தத்தையும் இளவேனிலையும் வரவேற்று மகிழ்ந்து, சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப் படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர்.
இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. “சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார்.
தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரும், எண்ணற்ற இலட்சிய வேங்கைகளும் வியர்வையும், கண்ணீரும், இரத்தமும் சிந்தி பாதுகாத்த திராவிட இயக்கக் கோட்டையை வீழ்த்தலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு மமதையோடும், மத்திய அரசின் அகங்காரத் திமிரோடும் தமிழகத்தில் நுழைய முனையும் சனாதன இந்துத்துவா சக்திகளை முறியடிக்கவும், மத்திய அரசின் ஆதிக்கப் பிடிகளை முறிக்கவும், நடைபெற இருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தந்து, இத்தேர்தலுக்குப் பின்னரும் தமிழக முதல்-அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் நல்லாட்சி தொடரவும் தமிழகத்தின் வாக்காளப் பெருமக்கள் தங்களின் பொன்னான வாக்குகளை வழங்கி ஆதரித்து வெற்றி பெறச் செய்யவும் உறுதி எடுப்போமாக!
தமிழகத்தில் மலரட்டும் திராவிட மாடல் நல்லாட்சி என்ற உணர்வுடன் தமிழ்ப் பெருமக்களுக்கு சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.