சென்னை,
வள்ளலார் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வள்ளலார் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற கருணை நிறைந்த உள்ளத்துடன், சாதி, சமயம், இனம் என எந்த வேறுபாடுமின்றி அனைத்து உயிர்களிடத்தும் அன்பையும் இரக்கத்தையும் போதித்தவர் வள்ளலார் எனப் போற்றப்படும் ராமலிங்க அடிகளார் அவதார தினம் இன்று.
ஜீவகாருண்யம், பசிப்பிணி போக்குதல், சமரச சுத்த சன்மார்க்கம் ஆகிய அவரது உயரிய கொள்கைகள் மனிதகுலத்திற்கு என்றும் வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கின்றன.
அனைத்து உயிர்களும் அன்புடனும், பசியின்றியும், துன்பமின்றியும் வாழ வேண்டும் என்ற வள்ளலாரின் அருட்சிந்தனைகளை நம் வாழ்விலும் கடைப்பிடிப்போம். அவரது அவதார தினத்தில், “அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை” எனும் அருள் ஒளி அனைவரது வாழ்விலும் நிறைந்து, மனிதநேயம் தழைத்தோங்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.