தமிழக செய்திகள்

வங்கிக்கு ரூ.3 கோடி பணத்துடன் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து; 4 பேர் காயம்

கவிழ்ந்து கிடந்த வாகனத்தில் இருந்த பணத்தை மற்றொரு வாகனத்துக்கு மாற்றி வங்கி அலுவலர்கள் பத்திரமாக கொண்டு சென்றனர்.

கும்பகோணம் ,

கும்பகோணம் அருகே வங்கிக்கு ரூ.3 கோடியுடன் சென்ற வேன் கவிழ்ந்ததில் காசாளர், பாதுகாவலர்கள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

தஞ்சையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து கும்பகோணத்தில் உள்ள வங்கி கிளைக்கு நேற்று மினி சரக்கு வேனில் ரூ.3 கோடி கொண்டு செல்லப்பட்டது. அந்த வேனில் 10 பெட்டிகளில் ரூபாய் நோட்டுகளும், நாணயங்களும் இருந்தன.

தஞ்சை-விக்கிரவாண்டி பைபாஸ் சாலையில் தாராசுரம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் வேன் சாலை தடுப்பில் மோதி. சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைக்கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக கும்பகோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

4 பேர் காயம்

இந்த விபத்தில் வேனில் வந்த தஞ்சையை சேர்ந்த வங்கி காசாளர் திவ்யகுமார்(வயது 36), பாதுகாவலர்கள் திருவையாறு பகுதியை சேர்ந்த சார்லஸ்(46), திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சுப்பிரமணி (51), டிரைவர் நாச்சியார் கோவிலை சேர்ந்த முரளிதரன்(62) ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு முதலுதவி அளித்து, கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முன்னதாக சம்பவ இடத்துக்கு வந்த தாலுகா போலீசார், காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பலத்த பாதுகாப்பு

பணம் இருந்த வாகனம் என்பதால் போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கும்பகோணம் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தகவலின் பேரில் வங்கி அலுவலர்கள் விரைந்து சென்று கவிழ்ந்து கிடந்த வாகனத்தில் இருந்த பணத்தை மற்றொரு வாகனத்துக்கு மாற்றி பத்திரமாக கொண்டு சென்றனர். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.