திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி வேன் ஓட்டுநரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஷியாம் (வயது 31). இவர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த மாத இறுதியில், வகுப்புகள் முடிந்த பிறகு யூகேசி பயிலும் 5 வயது சிறுமி பள்ளி வேனில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது, ஓட்டுநர் ஷியாம் அச்சிறுமியை பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால், சிறுமியையும் அவரது பெற்றோரையும் கொலை செய்துவிடுவதாக ஓட்டுநர் ஷியாம் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி, வீட்டிற்கு சென்றதும் பெற்றோரிடம் விபரத்தைக் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் இதுகுறித்து செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ஓட்டுநர் ஷியாமை நேற்று (வியாழக்கிழமை) அன்று கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.