தமிழக செய்திகள்

717 மதுக்கடைகளை மூடிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன்!

மனமகிழ் மன்றங்களுக்கு வழங்கப்பட்ட (FL2) மதுபான உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற மூன்றாவது நாளில், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள, 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்கது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி.

கடந்த திமுக ஆட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் சட்டம் - ஒழுங்கு சீரழிவு. எங்கு நோக்கினும் மதுக்கடைகளை மாநில அரசே நடத்துவதும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பள்ளிகள், குடியிருப்பு பகுதிகளில் தாரளமாக கிடைப்பதும் இளைஞர் சமுதாயத்தை போதையின் பிடியில் தள்ளின. இதனால் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. சென்னை கிண்டியில் உள்ள, தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் அளவுக்கு நிலைமை மோசமானது.

எனவே, மதுக் கடைகள் இல்லாத, போதை பொருட்கள் நடமாட்டம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கினால் மட்டுமே இளைஞர் சமுதாயத்தை மேம்படுத்த முடியும். பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். அதற்கு முதல்படியாக 717 மதுக் கடைகள் மூடல் அமைய வேண்டும்.

கடந்த காலங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலையோரங்களில் இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டபோது, அவை சத்தமில்லாமல் உட்புற சாலைகளுக்கு மாற்றப்பட்டன. அதுமட்டுமல்லாது, மூடப்பட்டதை விட பல மடங்கு சந்து கடைகள் சட்டவிரோதமாக திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான சந்து கடைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்தன.

கடந்த திமுக ஆட்சியில் FL2 உரிமம் என்ற பெயரில், தமிழகம் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஆயிரத்திற்கும் அதிகமான மனமகிழ் மன்றங்களுக்கு மதுபான உரிமம் வழங்கப்பட்டன. இவை பெரும் சமுதாய சீரழிவுக்கு வழிவகுத்தன. இளைஞர்களிடையே மது குடிப்பதை ஒரு சமுதாய அந்தஸ்து போல இந்த மனமகிழ் மன்றங்கள் மாற்றி வருகின்றன. இளைஞர்கள்மன மதுவுக்கு அடிமையாக இந்த மனமகிழ் மன்றங்கள் முக்கிய காரணமாக உள்ளன. எனவே, தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்கள், சமூக கிளப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள FL2 மதுபான உரிமத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.

மது இல்லாத, போதை இல்லாத தமிழ்நாடு அமைய படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அதற்கு முதல்படியாக FL2 மதுபான உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் எவ்வளவு மதுக்கடைகள் உள்ளன, ஒவ்வொரு கடையிலும் எவ்வளவு வியாபாரம் நடக்கிறது, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து மதுபானம் வாங்கப்படுகிறது அவற்றின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.