தமிழக செய்திகள்

வண்டலூர் பூங்காவில் பறவை காய்ச்சல் உறுதி; 2 நாட்கள் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

இதனை தொடர்ந்து, பறவைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

சென்னை

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவை காய்ச்சல் உறுதியான நிலையில், 2 நாட்கள் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் விடுமுறை தினத்தில் குடும்பத்துடன் சென்று சுற்றிப்பார்க்கும் இடங்களில் ஒன்றாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பறவை காய்ச்சல்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்வாழ் பறவைகளுக்கு H5N1 என்ற வைரசின் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், பறவை காய்ச்சல் தொற்று உறுதியாகி உள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அனுமதி மறுப்பு

இதனை தொடர்ந்து, பறவைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பறவை காய்ச்சலை தடுக்கும் வகையில் உயிர் பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன என பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதனால், வண்டலூர் உயிரியல் பூங்காவில் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT