சென்னை,
பறவை காய்ச்சலால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை முதல் மீண்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது. பறவைகள் இருப்பிடங்களை மட்டும் பார்க்க அனுமதி இல்லை.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நீர்வாழ் பறவைகளிடையே எச்5என்1 பறவை காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த 22-ந்தேதி முதல் பூங்காவிற்கு பார்வையாளர்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து பூங்காவில் விரிவான கிருமிநாசினி தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்கள் சுற்றி பார்க்க மீண்டும் திறக்கப்படுகிறது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பறவைகள் உள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அவ்விடங்களுக்கு பார்வையாளர்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். விலங்கு பராமரிப்புக் குழுவினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் பறவைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பறவைகள் அனைத்தும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பறவைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 22-ந்தேதி உயிரியல் பூங்கா ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விலங்கு பராமரிப்பு பணியில் நேரடியாக ஈடுபட்டுள்ள விலங்கு பராமரிப்பாளர்களிடமிருந்து மொத்தம் 26 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆர்டி-பிசிஆர் முறையின் மூலம் இன்புளூயன்ஸா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை செய்யப்பட்ட 26 மாதிரிகளிலும் இன்புளூயன்ஸா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
பூங்கா வளாகம் முழுவதும் விரிவான கிருமிநாசினிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்க தேவையான உயிரிப் பாதுகாப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன. விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் நலன், பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதில் உயிரியல் பூங்கா நிர்வாகம் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
பார்வையாளர்கள் பூங்கா நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், தங்களது வருகையின்போது பணியாளர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களையும் தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.