தமிழக செய்திகள்

சேலத்தில் களை கட்டிய வண்டி வேடிக்கை... கடவுள் வேடம் அணிந்து வந்த பக்தர்களால் பரவசம்

ராஜஸ்தான் வியாபாரிகள் சார்பில் பாபா ராம்தேவ் வேடமணிந்து வண்டியில் ஊர்வலமாக வந்தனர்.

சேலம்,

வண்டி வேடிக்கை

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கம்பம் நடுதல், கொடியேற்றம், அலகு குத்துதல், சக்தி அழைப்பு, பொங்கல் வைத்தல், தேரோட்டம் நடை பெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான வண்டி வேடிக்கை நேற்று இரவு நடந்தது. இதில், வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தனர்.

செவ்வாய்பேட்டை வைஸ்ய நண்பர்கள் குழு சார்பில் கேரள மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை உருவான வரலாறு கதையை விளக்கும் வகையில் பக்தர்கள் ஆதி சங்கரன், மூகாம்பிகை, சொர்ணாம்பிகை, லட் சுமி, சரஸ்வதி, பராசக்தி, முனிவர் மற்றும் அரக்கன் ஆகியோர் வேடங்களை தத்ரூபமாக அணிந்து வண்டியில் ஊர்வலமாக வந்தனர். இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

மதுரை வீரன்-கருப்பசாமி

இதேபோல், மற்றொரு வண்டியில் அமர்நாத் பனிலிங்கத்தில் சிவன், பார்வதி, விநாயகர், சந்திரன் ஆகிய கடவுள் வேடங்க ளையும், அப்புசெட்டி தெரு நண்பர்கள் குழு சார்பில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் என நால்வர் போன்று பக்தர்கள் வேடம் அணிந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

குறிப்பாக புராண கதைகளில் வரும் கடவுள்களை போன்று பக்தர்கள் வேடமாக அணிந்து வந்தனர். இதுதவிர, மதுரை வீரன், எல்லையை காக்கும் கருப்பசாமி போன்றும் பக்தர்கள் வேடம் அணிந்து அதற்கு ஏற்ற பாடலுக்கு ஆக்ரோஷமாக ஆடியவாறு வந்தனர்.

ராவணின் வரலாறு

இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மற்றொரு வண்டியில் கைலாய மலையை தூக்க முயன்று தோல்வி அடைந்த ராவணின் வரலாறு நாடகத்தை அதற்கு ஏற்ற கதாபாத்திரத்தில் பக்தர்கள் வேடம் அணிந்து மிகவும் தத்ரூபமாக பொதுமக்கள் மத்தியில் நடித்து காட்டியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதேபோல், செவ்வாய்பேட்டையில் வசிக்கும் ராஜஸ்தான் வியாபாரிகள் சார்பில் பாபா ராம்தேவ் வேடமணிந்து வண்டியில் ஊர்வலமாக வந்தனர்.

ஆட்டம், பாட்டம்

ஒவ்வொரு அலங்கார வண்டி முன்பும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் மேளதாளத்திற்கு ஏற்ப ஆட்டம், பாட்டத் துடன் ஊர்வலமாக வந்தனர். மேலும், குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் சிலர் முயல், கரடி, சிங்கம் போன்ற கார்ட்டூன் பொம்மை வேடம் அணிந்து ஆடியவாறு வந்தனர். இந்த கார்ட்டூன் முன்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அலங்கரிக்கப்பட்ட அனைத்து வண்டிகளும் வண்டிப்பேட்டை பகுதியில் இருந்து செவ்வாய்பேட்டை மெயின்ரோடு வழியாக தேர் நிலையம் வந்து தீயணைப்பு நிலையம் வழியாக ஊர்வலமாக சென்றது.

இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காண செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, சூரமங்கலம், குகை, நெத்தி மேடு, டவுன் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் செவ்வாய்பேட்டை மெயின்ரோட்டில எங்கு பார்த்தாலும் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முடிவில், சிறப்பாக அலங்கரித்து ஊர்வலமாக வந்த வண்டிகளுக்கு கோவில் விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.