தமிழக செய்திகள்

ஊர்க்கூடி தேர் இழுத்த கிராம மக்கள்; வன்னியரசு பாராட்டு

கிராம மக்களுடன் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தோம் என்று வன்னியரசு தெரிவித்தார்.

சென்னை,

ஊர்க்கூடி தேர் இழுத்த கிராம மக்கள்; வன்னியரசு பாராட்டு இது தொடர்பாக, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆடி மாத தேர் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் - பூட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாத தேர் திருவிழா நேற்று (01.08.26) வெகு சிறப்பாக நடைபெற்றது.

தேரோட்டம்

பூட்டை கிராம மக்களின் அழைப்பின் பேரில், தேர் திருவிழாவில் பங்கேற்று, ஜாகிர்தார்களுடன் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தோம்.

பக்தர்கள் பங்கேற்பு

அனைத்து சமூகத்தினருக்கும் தேரோட்டம் பொதுவாக நடைபெற வேண்டுமென சட்டப்போராட்டம் நடைபெற்ற காலங்கள் முன்னர் இருந்ததுண்டு. இன்று அனைத்து தரப்பு மக்களும் இணைந்து தேரோட்டத்தை சிறப்பாக முன்னெடுத்து செல்லும் சமூக நல்லிணக்கம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதிலிருந்து திரளான பக்தர்கள் கோவில் தேரோட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.

பாதுகாப்பு

இந்து சமய அறநிலையத்துறையின் ஒருங்கிணைப்பு பாராட்டத்தக்கதாய் அமைந்திருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செஹனாஸ் இலியாஸ் முன்னின்று தேரோட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கினார்.

பங்கேற்றனர்

இந்நிகழ்வில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராகேஷ், பாட்டாளி மக்கள் கட்சியின் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் பப்லு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சங்கராபுரம் தொகுதி மாவட்ட செயலாளர் இல. சிலம்பன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் உடன் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.