திருப்பூர்,
திருப்பூரில் பட்டா மாறுதலுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செயதனர்.
திருப்பூர் பழனிசாமி நகரை சேர்ந்த மணிவாசகம் (வயது 31), தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரில் 20 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். அதனை பட்டா பெயர் மாற்றம் செய்ய 2 முறை விண்ணப்பித்திருந்தார். ஆனால் பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியவில்லை. தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து 3-வது முறையாக மணிவாசகம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். இதையடுத்து, அவரை தொட்டிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) (பொறுப்பு) நிசார் அப்துல் ரகுமான்(40) தொடர்புகொண்டு பேசினார். அப்போது "பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வேண்டும்” என கேட்டுள்ளார். ஆனால் மணிவாசகம் அவ்வளவு பணம் தரமுடியாது என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து சற்று இறங்கி வந்த வி.ஏ.ஓ. நிசார் அப்துல் ரகுமான், ரூ.5 ஆயிரம் தரும்படி வலியுறுத்தி உள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிவாசகம் இதுகுறித்து, திருப்பூர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.யிடம் புகார் செய்தார். அவரது ஆலோசனைப்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளுடன் நேற்று மணிவாசகம், தொட்டிபாளையம் வி.ஏ.ஓ. அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு பணியில் இருந்த நிசார் அப்துல் ரகுமானிடம் ரூ.5 ஆயிரத்தை வழங்கினார். அவர் பணத்தை பெற்றதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நிசார் அப்துல் ரகுமானை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.