தமிழக செய்திகள்

விவசாயியிடம் பட்டா பெயர் மாற்ற ரூ.4,000 லஞ்சம்... கையும் களவுமாக பிடிபட்ட வி.ஏ.ஓ

விவசாயி ஒருவர் தனது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார்.

திண்டுக்கல்,

நத்தம் அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் பட்டா பெயர் மாற்றத்திற்காக ரூ. 4,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சத்யா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த தரகர் சாந்தகுமார் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர்.

பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். இந்தப் பணிக்காக கிராம நிர்வாக அலுவலர் சத்யா ரூ. 4,000 லஞ்சமாக கேட்டுள்ளார். அந்தப் பணத்தை தரகர் சாந்தகுமார் என்பவரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து விவசாயி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விவசாயி தரகர் சாந்தகுமாரிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

விசாரணையில் சத்யாவின் தூண்டுதலின் பேரில் பணம் பெறப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கிராம நிர்வாக அலுவலர் சத்யா மற்றும் தரகர் சாந்தகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துனர்.