சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் அமைந்துள்ள 1,800 ஆண்டுகள் பழமையான வாசீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர் அருகே, மர்ம நபர்கள் தொடர்ந்து மாட்டிறைச்சிக் கழிவுகளைக் கொட்டி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாடல் பெற்ற இப்புனிதத்தலத்தில், திட்டமிட்டு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் அரங்கேறி வரும் வேளையில், விஜய்யின் அரசும் அதன் இந்து சமய அறநிலையத்துறையும் இதனைக் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.
கோவிலின் சுற்றுச்சுவர் அருகே கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளைத் தெருநாய்கள் கோவில் வளாகத்திற்குள் கவ்விக்கொண்டு வருவதால், பிரகாரத்தின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்குச் சொந்தமான 2.15 ஏக்கர் நிலத்தின் சுற்றுச் சுவருக்குள்ளேயே மாட்டிறைச்சிக் கழிவுகள் வீசப்பட்டு, கடுமையான சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகப் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே கோவிலின் புனிதத்தைக் காக்கத் தவறிய விஜய்யின் அரசு, உடனடியாகத் தனது அலட்சியப் போக்கைக் கைவிட்டு, இச்செயலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் வளாகத்தையும் அதற்குச் சொந்தமான இடங்களையும் தூய்மைப்படுத்தி, தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.