தூத்துக்குடி,
தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் பெட்ரோல் பங்கில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் சோட்டையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 40), காய்கறி கடை நடத்தி வந்தார். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளராகப் பணியாற்றியவர்.
பாலமுருகன் இன்று காலை 6 மணியளவில் தனது பைக்கிற்கு பெட்ரோல் போடுவதற்காகச் சேதுபாதை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்றுள்ளார். அப்போது 2 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கூலிப்படை கும்பல், பாலமுருகனைச் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை குறித்துத் தகவலறிந்து வந்த தாளமுத்துநகர் போலீசார், உடலைக் கைப்பற்றித் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினார்.
போலீசார் நடத்திய விசாரணையில், பாலமுருகனின் அக்கா மகளுக்கு இன்று பூப்புனித நீராட்டு விழா நடைபெற இருந்ததை முன்னிட்டுச் சோட்டையன்தோப்பு பிரதான சாலையில் அவர் பேனர் வைத்திருந்தார். அதன் அருகே அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. சுற்றுச்சூழல் அணி நிர்வாகியும் பார் உரிமையாளருமான ரவி என்பவர், தான் நடத்தவிருந்த மாட்டு வண்டிப் போட்டிக்கான பேனரை வைத்துள்ளார். இதில் பார் ரவி வைத்த பேனரில் இருந்த படங்களைப் பார்த்துப் பாலமுருகன் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பார் ரவி, தனது கூலிப்படை மூலம் பாலமுருகனைக் கொலை செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பாலமுருகனின் உறவினர்கள் மற்றும் பகுதி மக்கள் என நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு சோட்டையன்தோப்பு பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்ட எஸ்.பி. மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பாதுகாப்பு கருதி அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து பாலமுருகனின் மனைவி சுதா அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் உரிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சம்பவ இடத்தை நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பெட்ரோல் பங்கில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், கொலை நடந்த 6 மணி நேரத்திற்குள் அதில் தொடர்புடைய 5 குற்றவாளிகளையும் கைது செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய தாளமுத்துநகர், பாலதண்டாயுதம்நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சிவா(எ) சிவச்சந்திரன் (வயது 22), தூத்துக்குடி, கே.வி.கே.நகரைச் சேர்ந்த பரமசிவன் மகன் சிவக்குமார்(22), லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த தினகரன் மகன் கோகுல்நாத்(24), தூத்துக்குடி, சொட்டையன்தோப்பைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன்(20), தாளமுத்துநகர், மாதாநகர் 5-வது தெருவைச் சேர்ந்த பொய்யாமொழி மகன் பொன்பாண்டி(எ) ரவி(44) ஆகிய 5 பேரையும் 6 மணி நேரத்தில் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.