கடலூர்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஒரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் இளையராஜா (வயது 39). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒரங்கூர் முகாம் செயலாளராக இருந்து வந்தார். இவரும், பட்டாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த அஸ்வினிதா(30) என்ப வரும் காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு விஷ்ணு(10), மிதுன்(8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 12-ந்தேதி ஒரங்கூர் கிராமத்தில் உள்ள பெரியசாமி என்பவரது விவசாய கிணற்றில் இளையராஜா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆனால் அஸ்வினிதாவின் நடவடிக்கையும், பேச்சும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அஸ்வினிதாவின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு போலீசார் ரகசியமாக ஆராய்ந்தனர். அதேபோல் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டனர்.
அஸ்வினிதாவும், இளையராஜாவின் சித்தி மகனான பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்த கனகராஜ் மகன் வெங்கடேசன்(32) என்பவரும் தினமும் செல்போனில் மணிக்கணக்கில் பேசியது தெரிந்தது. இதையடுத்து அஸ்வினிதா, வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் போலீசார் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். முதலில் இருவரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர்.
போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
அண்ணன் என்ற முறையில் இளையராஜாவின் வீட்டுக்கு வெங்கடேசன் அடிக்கடி வந்துள்ளார். அப்போது அவருக்கும், அஸ்வினிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறி மணிக்க ணக்கில் பேசி வந்தனர். இதுவே நாளடைவில் கள்ளக்காத லாக மாறியது. இந்த விவகாரம் தெரிந்ததும் இளையராஜா அதிர்ச்சி அடைந்தார். மேலும் மனைவியையும், தம்பியையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.
இந்தநிலையில் கடந்த 11-ந்தேதி இளையராஜா, வெங்கடேசனை செல்போனில் தொடர்பு கொண்டு மது குடிக்க அழைத்துள்ளார். இதையடுத்து அவர், தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த செல்லையா மகன் செல்வம் (23) என்பவருடன் காரில் கீழ்கல்பூண்டிக்கு வந்துள்ளார். அங்குள்ள டாஸ்மாக் கடையில் 3 பேரும் மதுபாட்டில்கள் வாங்கிக்கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றனர்.
அங்குள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து 3 பேரும் மதுகுடித்தனர். போதை தலைக்கு ஏறியதும் இளையராஜா, இனிமேல் தனது மனைவியுடன் பழகக்கூடாது என்று கூறி வெங்கடேசனை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் சரமாரியாக அடித்து இளையரா ஜாவை கொலை செய்தார்.
பின்னர் கொலையை மறைக்க வெங்கடேசன் திட்டமிட்டார். அதன்படி இருவரும் சேர்ந்து உடலை காரில் தூக்கிப் போட்டு இனாம் அகரம் கிராமத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் இளையராஜா விபத்தில் இறந்ததுபோல் நாடகமாட திட்டமிட்டனர். எனவே மீண்டும் அவரது உடலை கீழ்கல்பூண்டியில் மது குடித்த இடத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு கிடந்த இளையராஜா ஓட்டி வந்த ஸ்கூட்டரை எடுத்தனர்.
அதை செல்வம் ஓட்டி வர, அவருக்கு முன்னால் வெங்கடேசன் காரில் இளையராஜாவின் உடலுடன் ஒரங்கூருக்கு சென்றார். அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பெரியசாமியின் கிணற்றில் இளையராஜாவின் உடலை வீசினர். பின்னர் ஸ்கூட்டரை கிணற்றின் மீது மோதி விழுந்து கிடப்பதுபோன்று செய்து விட்டு சென்று விட்டனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து சந்தேக மரண வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி வெங்கடேசன், செல்வம் ஆகியோரையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அஸ்வினிதாவையும் கைது செய்தனர். விசிக பிரமுகரை அடித்துக் கொலை செய்து விட்டு உடலை கிணற்றில் வீசிய வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.